வாழ்க்கை குறிப்பு
இவர் திருவாரூரில் 1776 ஆம் ஆண்டு பிறந்தார். வைத்தீஸ்வரன் கோயில் முத்துக்குமாரசுவாமி அருளால் பிறந்ததால்
இவருக்கு முத்துசுவாமி என்று பெயரிட்டார்கள். சமஸ்கிருதம், தெலுங்கு, வேத மந்திரங்கள், ஜோதிட சாஸ்திரங்கள்
அனைத்திலும் இவர் தேர்ச்சி பெற்றவர். வீணை வாசிப்பதிலும் வல்லவர்.
சிதம்பர யோகி என்பவரிடம் தீட்சை பெற்று காசிக்குச் சென்றார். அங்கிருந்து திரும்பும் போது கங்கையில் வீணை
ஒன்று கிடைத்ததாகக் கூறப்படுகிறது. திருத்தணி முருகப்பெருமானின் அருளால் "ஸ்ரீ நாதாதி குருகுஹோ" என்ற முதல்
பாடலை மாயாமாலவகௌள ராகத்தில் பாடினார்.
காஞ்சிபுரம், சீர்காழி, சிதம்பரம், திருவண்ணாமலை என பல ஸ்தலங்களுக்குச் சென்று இறைவனின் பெயரில் பல
கிருத்திகளை இயற்றினார். திருவாரூர் கமலாம்பாள் மீது "நவாவரணம்" என்ற ஒன்பது கீர்த்தனைகளை இயற்றினார்.
இவருடைய கீர்த்தனைகளில் ராகத்தின் முழு வடிவமும் கிடைக்கும். நவகிரகங்களின் பெயரிலும் இவர் கீர்த்தனைகளை
பாடி இருக்கிறார். அமிர்தவர்ஷினி ராகத்தில் பாடி மழையை வருவித்ததாக வரலாறு கூறுகிறது. மேல்நாட்டு
சங்கீதத்திலும் ஆர்வம் கொண்டு 30-க்கும் மேற்பட்ட நோட்டு சுவரங்களை இயற்றியுள்ளார்.
தன்னுடைய பாடல்கள் அனைத்திலும் "குருகுஹ" என்ற முத்திரையை உபயோகித்துள்ளார். 1835 ஆம் ஆண்டு தீபாவளி என்று
மீனாட்சி அம்மன் மீது பாடலைப் பாடியபடி இறைவனிடம் ஒளிவடிவாகச் சேர்ந்தார்.