முத்தையா பாகவதர்

1877 – 1945

இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ் பெற்ற வாக்கைக்காரர். ஹரிக்கதா சக்கரவர்த்தி என்ற பெயரும் பெற்றவர். பல புதிய ராகங்களைக் கண்டுபிடித்தவர்.

வாழ்க்கை குறிப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் ஹரிகேசநல்லூர் என்ற ஊரில் பிறந்தவர். தியாகராஜ சுவாமிகளின் சிஷ்ய பரம்பரையில் வந்த சாம்ப சிவ ஐயர் என்பவரிடம் இசை பயின்றவர். அசுர சாதகம் செய்து மூன்று காலங்களிலும் சரளமாக பாடும் திறன் பெற்றவர். ஹரிக்கதா சக்கரவர்த்தி என்ற பெயரும் பெற்ற இவரை, எல்லா சமஸ்தான மன்னர்களும் ஆதரித்தார்கள். மைசூர் மகாராஜா கிருஷ்ணராஜ உடையார் அவர்களுக்கு ஏற்பட்ட நோயைத் தீர்க்க, உதடு ஒட்டாமல் வரும் "ராஜ ராஜ ராஜதே" என்ற பாடலை "நிரோஷ்டா" ராகத்தில் பாடி நோயைக் குணப்படுத்தினார். இதற்காக மைசூர் மகாராஜா இவருக்கு "பாகவத காயக சிகாமணி" என்ற பட்டத்தை வழங்கினார். மகாராஜாவின் வேண்டுகோளை ஏற்று ஒரே இரவில் 100 பாடல்களை சாமுண்டீஸ்வரி அம்மன் மீது இயற்றினார். இவை சாமுண்டாம்பாள் அஷ்டோத்திற கீர்த்தனைகள் என்று அழைக்கப்படுகிறது. சுவாதி திருநாள் பெயரில் இசைக்கல்லூரியைத் தொடங்கி அதன் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். அப்பொழுது "சங்கீத கல்ப திரும" என்ற இசை இலக்கண நூலை எழுதினார். நானூறுக்கும் மேற்பட்ட பாடல்களை தெலுங்கு, தமிழ், சமஸ்கிருதம், கன்னடம் ஆகிய மொழிகளில் இயற்றியுள்ளார். கர்ண ரஞ்சனி, அம்சநந்தி, வளச்சி, மோகன கல்யாணி, விஜயநாகரி, நிரோஷ்டா போன்ற பல புதிய ராகங்களை இவர் கண்டுபிடித்திருக்கிறார். 1930 இல் சங்கீத கலாநிதி பட்டம் மற்றும் 1942 ல் டாக்டர் பட்டம் பெற்று கௌரவிக்கப்பட்டார்.
பிரபலமான பாடல்கள்

ராஜ ராஜ ராஜதே

நிரோஷ்டா ராகத்தில் (உதடு ஒட்டாத ராகம்) அமைந்த பாடல்.

சித்தி விநாயகம் சேவேசம்

மோகன கல்யாணி ராகத்தில் அமைந்த மிகப்பிரபலமான பாடல்.